மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பள்ளி வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான பி.கே.என் ஆரம்பப்பள்ளி மற்றும் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 24 பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியின் மினிப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றனர். பள்ளிப் பேருந்து விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால், சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ரவிச்சந்திரன், உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு மாணவ, மாணவிகளை கீழே இறக்கி விட்டுள்ளார்.
பேருந்தில் இருந்த உதவியாளர் பாண்டியம்மாளும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் வேகமாக ஓடிச்சென்று மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். அவர்கள் கீழே இறங்கியதும் பேருந்தில் வேகமாக தீ பரவத் தொடங்கி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே பேருந்தின் மேல் பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது.
எனினும் தீயணைப்புப் படையினர் மேலும் பரவவிடாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாற்றுப் பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்குச்சென்ற நிலையில், தீ விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.