கரூர் கூட்ட நெரிசல்.. அருணா ஜெகதீசன் அறிக்கை எப்போது தாக்கல்? அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கரூரில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், இன்னும் 3 மாதங்களுக்குள் (டிசம்பர் 28ஆம் தேதிக்குள்) விசாரணை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 27ஆம் தேதி விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவு ஆகியுள்ளனர்.
இதற்கிடையே, கரூர் சம்பவம் நடந்த அன்று இரவே இந்த கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உடனடியாக அருணா ஜெகதீசனும் தனது விசாரணையை தொடங்கினார். இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாக அரசிதழில் அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஒரு அரசியல் கட்சி கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் மிதிபட்டு மரணமடைந்ததற்கும், காயமடைந்ததற்கும் ஏற்பட்ட சூழ்நிலை என்ன? இந்த சோக நிகழ்வு ஏற்படுவதற்கு யார் பொறுப்பு? ஆகியவை குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.
இந்த கூட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி, அந்த அனுமதிக்கான நீட்டிப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்ட ஒழுங்குமுறைகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான தற்போதுள்ள விதிமுறைகள், அரசியல் கட்சிகள் பேரணி, கூட்டங்கள் நடத்தும்போது மக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்காமல் இருப்பதற்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற அபாயங்கள் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்குள் (டிசம்பர் 28ஆம் தேதிக்குள்) விசாரணை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசுக்கு அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.