தூத்துக்குடியில் பயங்கரம்.. வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் வியாபாரி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (43). இவர் கோலப்பொடி வியாபாரம் செய்து வந்துள்ளார். மாரீஸ்வரனின் வீட்டின் அருகே வசித்து வருபவர் ராமசாமி (75). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், இருவரும் ஒன்றாக அமர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், நேற்றும் வழக்கம் போல் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ராமசாமியின் செல்போன் தொலைந்தது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராமசாமி, தன்னிடம் இருந்த அரிவாளால் மாரீஸ்வரனை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரீஸ்வரன் அங்கிருந்து ஓடினார். ஆனாலும், விடாமல் அவரை விரட்டிச் சென்ற ராசாமி, அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கிருந்து ராமசாமி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மாரீஸ்வரனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், மாரீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்ற ராமசாமி அங்கு சரண் அடைந்துள்ளார். பின்னர், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரீஸ்வரனை ராமசாமி கொலை செய்தது ஏன்? இருவருக்கும் முன்பகை ஏதும் இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.