பாக்ஸிங் டே டெஸ்ட்: மெல்போர்னில் விக்கெட் மழை - பேட்டர்கள் தடுமாற்றம்
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில ஆஸ்திரேலிய அணி 152 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இந்த போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வெளியிட்டிருந்தன.
அதன் பின் களமிறங்கிய வீரர்களில் மைக்கேல் நேசர் 35 ரன்களையும், உஸ்மான் கவாஜா 29 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியும் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 2 ரன்னிலும், ஜாக் கிரௌலி 5 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், இப்போட்டியில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அதன் பின் களமிறங்கிய ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடிய நிலையில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் கஸ் அட்கிசன் 28 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள், வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 29.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 110 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.