IND vs SA:டி20 தொடரில் இருந்து விலகிய அக்ஸர் படேல்

IND vs SA:டி20 தொடரில் இருந்து விலகிய அக்ஸர் படேல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 17) லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும்.

இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தொடரிலிருந்து விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல், உடல்நலக் குறைவு காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய அக்ஸர் படேல், மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தான் அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவர் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்ஸர் படேலுக்கு மாற்றாக ஷபாஸ் அஹ்மத் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.