பதில் சொல்லும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் இல்லை - செங்கோட்டையன் பதிலடி
எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லும் அளவுக்கு பெரிய தலைவர் இல்லை என்று செங்கோட்டையன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, செங்கோட்டையன் கூறுகையில், ''கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், சுயநலவாதி என்று எடப்பாடி பழனிசாமி என்னை விமர்சனம் செய்திருப்பதாக சொல்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்ததாக கூறுகிறீர்கள். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னை பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறேன். கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி விழாவை நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். பாருங்கள்'' என, கூறி சென்றார்.
முன்னதாக கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கிளம்பிய செங்கோட்டையனுடன் ஏராளமான தவெகவினர் விமான நிலையம் வரை கார்களில் வந்து வழியனுப்பி வைத்தனர்.