கருத்துக் கேட்பு கூட்டத்தில் பறந்த நாற்காலிகள் - நெல்லையில் பரபரப்பு!
கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்வை 'அறப்போர் இயக்கம்' இன்று நடத்தியது. இது வழக்கமான கருத்துக்கேட்பு கூட்டங்களைப் போல் அல்லாமல், மக்களின் பாதிப்புகளை நேரடியாக பதிவு செய்து, அரசிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்டது.
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினர். பொதுமக்களும் கல்குவாரிகளால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சட்டவிரோத குவாரிகள் அதிகரிப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், “ராதாபுரம் பகுதியில் 50 லட்சம் கன மீட்டர் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் ரூ.250 கோடி அபராதம் விதித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோத கற்கள் எடுப்பது தொடர்பான பிரச்சனை அதிகரித்துள்ளது.
கல்குவாரிகளால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது, கால்வாயில் தண்ணீர் வரவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2020-ல் 53 சட்டவிரோத குவாரிகள் இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்காக (120 குவாரிகள்) அதிகரித்துள்ளது” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தங்களிடம் எந்த கருத்தும் பெறாமல் அவதூறு பேசுவதாகவும், இதற்காக தங்களிடம் அறப்போர் இயக்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவானதால் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் கைகலப்பு
தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது, திடீரென மண்டபத்திற்குள் இருந்த நாற்காலி மற்றும் மேஜைகளை சிலர் தூக்கி வீசினர். அதில், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷூக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் கூடுதல் போலீஸை வரவழைத்து இருதரப்பையும் கூட்டம் நடைபெற்ற அரங்கிலிருந்து வெளியேற்றினர்.
மேலும், காவல் துறை அனுமதி பெறாமல் கூட்டம் நடைபெற்றதால் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் மகேஷ் உத்தரவிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், தங்களிடம் மன்னிப்பு கேட்காமல் அறப்போர் இயக்கத்தினர் இங்கிருந்து வெளியே செல்லக்கூடாது என வாக்குவாதம் செய்தனர்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும், காவல் நிலையம் வந்து புகாரை மனுவாகக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி போலீசார் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து, நாற்காலி வீச்சில் ஈடுபட்ட ஒருவரை மட்டும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பணம் வாங்கி அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு!
இதுகுறித்து குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறும்போது, "கல்குவாரி உரிமையாளர்களிடம் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் கல்குவாரிக்கு எதிரான சிலரை கூட்டி வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, எங்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். மேலும், இந்த அமைப்பின் பின்னணியில் கேரளாவை சேர்ந்த கனிமவளத் துறை அமைப்பினர் இருக்கின்றனர் என குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.