பராசக்தி படத்தின் டிரைலர் வெளியானது; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்

பராசக்தி படத்தின் டிரைலர் வெளியானது; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்

பராசக்தி படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் பராசக்தி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலரில் சிவகார்த்திகேயனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மோகனும் ரயிலில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது போலவும், அந்த இடத்தில் 1964 என்ற ஆண்டை குறிக்கும் வகையில் டிரைலர் தொடங்குகிறது.

முதல் டயலாக்காக ரயில் ஓட்டுநர் ஒருவர் சிவகார்த்திகேயனை பார்த்து ''ரயில்வேயில் வேலை செய்கிறாய். இந்தியில் பேசு என கூறுவது போலவும், அதற்கு சிவகார்த்திகேயனும் ''மதராசி டெல்லி வந்தால் இந்தி பேசுவேன். டெல்லிக்காரர்கள் மதுரை வந்தால் தமிழ் பேசுங்கள்'' என்பது போல காட்சியானது மதுரை ரயில் நிலையத்தில் இருப்பது போல படமாக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக படத்தின் இரண்டாம் கதாநாயகனாக இருக்கக்கூடிய அதர்வா முரளியை காட்டுகிறார்கள். நேற்றைக்கு வைத்த ரசம் சோறு தானே என, சலிப்புடன் உணவு சாப்பிட வரும்பொழுது, ''ஏன் துரை ரசம் சோறெல்லாம் சாப்பிட மாட்டாரா?'' என நகைச்சுவையோடு சிவகார்த்திகேயன் கூறுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதிலிருந்து படத்தில் அண்ணன், தம்பியாக அல்லது நண்பர்களாக இருவரும் நடித்து இருப்பது தெரிய வருகிறது.

நாயகன் சிவகார்த்திகேயன் இரண்டாம் கதாநாயகன் முரளி அதர்வா இரண்டையும் காண்பித்த பிறகு டிரைலரில் யாரை காட்டுவார்கள்? வழக்கம் போல கதாநாயகி ஸ்ரீ லீலாவை தான். நேஷனல் ரேடியாவில் வர்ணனையாளராக அழகுற காட்சியளித்து நளினத்துடன் நமஸ்காரம் கூறி அந்த காலகட்டத்தில் மதராஸ் மாகாணத்தில் பரவலாக தெலுங்கு மொழி பேசும் மக்களை எடுத்துக்காட்டும் விதத்தில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அழகான கதாநாயகியை டிரைலரில் காட்டிய பிறகு, ஆபத்தான வசனத்தை சொல்வது போல நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களில் இந்தியை அதிகாரப்பூர்வமாக ஆட்சி மொழியாக்கும் சட்டம் இயற்றப்பட இருக்கின்ற என்கிற அறிவிப்பு வானொலியில் கேட்கிறது. அடுத்த கணமே டிரைலர் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

பராசக்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்
பராசக்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்

எங்கு பார்த்தாலும் போராட்டம் என்று குரல் ஒலிக்க கூடிய அந்த இடத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்பன் உதயநிதி வழங்கும் என பெயர் போடப்பட்டிருக்கிறது. இது சூசகமாக எதையோ ஒன்றை மறைமுகமாக போடப்பட்டிருப்பது போன்று எடிட் செய்திருக்கிறார் எடிட்டர் சதீஷ் சூர்யா.

தொடர்ச்சியாக கதாநாயகன் சிவகார்த்திகேனிடம், 'எட்டாவது படித்த என்னை படிக்காத தற்குறி ஆக்கிவிட்டார்கள்' என அவரது பாட்டி புலம்புவது போல 1960களில் தமிழக மக்களின் மனநிலையை ஒரே வரியில் வசனமாக வைத்திருக்கிறார்கள் வசனகர்த்தா மதன் கார்த்திக் மற்றும் ஷான் கருப்பசாமி.

மேலும் சிவகார்த்திகேயன் ரயில்வே துறையில் பணியாற்றுவதால் மத்திய சர்க்காருக்கு அடிமை வேலை செய்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார் என முரளி பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டிருப்பதால்,படத்தில் சிவகார்த்திகேயன் ரயில்வேயில் வேலை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிரெய்லரில் இடையில் காதல் ரசம் சொட்ட சொட்ட நாயகனுக்கு நாயகி ஹிந்தி சொல்லிக்கொடுக்கக்கூடிய காட்சிகள் ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

துவக்கத்திலேயே சிவகார்த்திகேயன் சாதுவான நபர் ஆகவும், அதர்வா முரளி ஆக்ரோஷமான இளைஞராகவும் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அதேப் போல சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, விறுவிறுப்பான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஒவ்வொரு சம்பவங்களையும் அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வினை அழுத்தம் திருத்தமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிக்கே சந்திரன்.

படத்தின் ஒட்டுமொத்த குறியீட்டையும் காட்டும் காட்சி அமைப்பாக 'அண்ணா' போல நடிகர் சேத்தன் இருக்கிறார். அவர் பேசிய வசனமானது, 'இதை யார் செய்தாலும் நிச்சயமாக அவர் என்னுடைய தம்பி' என்று மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களை வெளிப்படையாகவே குறியீடாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய நிகழ்வினை டிரைலர் பார்க்கக்கூடிய பலருக்கும் நினைவுக்கு வந்து போயிருக்கும்.

படத்தில் பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனக்கான பணியினை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அந்த காலத்து ரயில் நிலையம், ஆல் இந்தியா ரேடியோ, மனிதர்களுடைய உடை, குறிப்பாக 60களில் சுவர்கள் எப்படி இருந்திருக்கும், சுவரில் வண்ணம் எப்படி அடிக்கப்பட்டிருக்கும், காவல் நிலையம் எப்படி இருக்கும், இவை அனைத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் கலை இயக்குனர் அண்ணாதுரை. இப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.