நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உண்மை வென்றிருப்பதாக, நடிகர் திலீப் கூறியுள்ள நிலையில், நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.
கேரளாவில் பிரபல நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கிலிருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திலீப், உண்மை வென்றிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக திலீப் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் கிரிமினல் கூட்டுச் சதி உண்டு, அதனை விசாரிக்க வேண்டும் என மஞ்சு வாரியர் சொன்னதில் இருந்து எனக்கெதிரான கூட்டுச் சதி ஆரம்பித்தது என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ள திலீப், அன்றைக்கு இருந்த உயர் அதிகாரியும், அவர் தேர்ந்தெடுத்த போலீஸ் அதிகாரிகளும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் உதவியுடன் ஒரு பொய் வழக்கை உருவாக்கி கதையைப் பரப்பினர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இது என்ன நீதி? எனக் கேள்வி எழுப்பியுள்ள நடிகை பார்வதி, கவனமாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை இப்போது மிகவும் கொடூரமாக வெளிப்படுவதைப் பார்ப்பதாக கூறியுள்ளார். இதேபோல மலையாள நடிகைகளான ரீமா கலிங்கல் (Reema Kallingal) மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர், நடிகைக்கு துணை நிற்போம் என்ற சமூக வலைத்தள பரப்புரையை தொடங்கியுள்ளனர். மலையாள நடிகர் சங்கமான அம்மா, நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.