‘அப்பா நலமுடன் இருக்கிறார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்’ - பாரதிராஜாவின் மகள் வேண்டுகோள்
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், ‘அப்பாவின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று அவரது மகள் ஜனனி பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜா மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் அவரது உடல்நிலை குறித்து வெளிவரும் பல்வேறு வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாரதிராஜாவின் மகள் ஜனனி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ‘அவர் நலமுடன் உள்ளார்’ என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘இயக்குநர் பாரதிராஜா மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன் மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தகுந்த மருத்துவ ஆதரவுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நல்லமுறையில் ஒத்துழைக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமது மகன் மனோஜ் பாரதிராஜாவின் இறப்பிற்கு பிறகு, பாரதிராஜா கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸடூயோக்களில் செட் அமைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி, வெளிப்புற படப்பிடிப்புகள் மூலம் 80-களில் தமிழ் சினிமாவின் வரையறையை மாற்றி எழுதியவர் இயக்குநர் இமயம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் பாரதிராஜா.
தொட்டதெல்லாம் தூள் எனும்படி 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என்று 80, 90 களில் இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் தான்.இவரது படங்களில் அறிமுகமான நடிகர், நடிகைகள் பலர் இன்றும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளனர் என்றால் அது மிகையாது.
இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான பாரதிராஜா, உடல்நல குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.