ஜனநாயகன் VS பராசக்தி - எத்தனை திரையரங்குகள்?

ஜனநாயகன் VS பராசக்தி - எத்தனை திரையரங்குகள்?

தற்போது வரை பராசக்தி, ஜனநாயகன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் 25 சதவீத திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லக் கூடிய ’ஜனநாயகன்’ ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தான் கடைசி திரைப்படம் என விஜய் வெளிப்படையாக பல முறை அறிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் திரைப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் பேசுகையில், ”ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவதில் சற்று சிக்கல் இருக்கும்பட்சத்தில் உள்ளே புகழ்ந்து வெற்றி பெற்று விடலாம் என நினைப்பவர்களை எச்சரிக்கிறேன். இது தளபதி விஜய் திரைப்படம்” என பேசி இருந்தார். (அந்தப் பேச்சானது மறைமுகமாக பராசக்தி திரைப்படத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இருந்ததாக விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்)

அதே வேளையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கக் கூடிய ’பராசக்தி’ திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் ”இந்த பொங்கல் அண்ணன், தம்பி பொங்கல். 9 ஆம் தேதி ஜனநாயகனை பார்த்து கொண்டாடுங்கள், 10 ஆம் தேதி பராசக்தியை பார்த்து கொண்டாடுங்கள்” என இரண்டு திரைப்படங்களுக்கும் ஆதரவாக பேசி இருந்தார்.

அதே வேளையில் இந்த திரைப்படத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி, தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாக வெளியிடுகிறார். அதனால் தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கக் கூடும் என பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் எத்தனை திரையரங்குகள் கிடைக்கக் கூடும் என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்தை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “தற்போது வரை பராசக்தி, ஜனநாயகன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் 25 சதவீத திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இது குறித்த முழு விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஏனெனில் படக்குழுவினர் தற்போது சென்சார் பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நாளை மாலைக்குள் முழு விவரம் தெரிய வரும்.

அனேகமாக ஜனநாயகன் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 60% திரையரங்குகள் கிடைக்கும், மீதமுள்ள 40% சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது” என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.