எஸ்ஐஆரில் பெயர் இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்: திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!
எஸ்.ஐ.ஆர்-இல் பெயர் இல்லாதவர்கள் அகதி முகாம்களில் அடைக்கப்படும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
முதலில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “பாஜக ஆட்சியில் இருக்கும் போது எப்போதுதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்குகிறது. பலத்த பாதுகாப்பு இருக்கக்கூடிய டெல்லியிலேயே பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்றார்.
தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் குறித்து பேசிய அவர், “எஸ்.ஐ.ஆர்-ஐ மத்திய பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் திரும்ப பெற வேண்டும். அதிமுகவின் கவுன்சிலராக இருக்கக் கூடியவர்களுக்கே இந்த படிவத்தை நிரப்ப தெரியவில்லை. மோடியும், அமித்ஷாவும் தேர்தலை ஆணையத்தை ஆட்டி வைத்து வருகின்றனர். ஆளுங்கட்சியின் கைத்தடியாக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது” என்றார்.
அந்நிய நாட்டு மக்களை அடைத்து வைப்பதற்காக அமெரிக்கா அகதிகள் முகாம்களை ஏற்படுத்தியது போல, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அகதி முகாம்களில் அடைக்கப்படும் நிலை ஏற்பட போகிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்குரிமை இல்லாதவர்களாக மாற்றப்படுவார்கள். மதவெறியை தூக்கிப்பிடிக்கும் வேலையை பாஜக செய்கிறது” என்றார்.