நிறைவடைந்தது பீகார் சட்டமன்றத் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு?
பீகார் சட்டமன்றத்துக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் மாலை 5 மணி நிரலவப்படி மொத்தமாக 67.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பீகார் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதமுள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அனைத்து வாக்குச்சாவடிகளும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பின. நீண்டவரிசையில் நின்றபடி மக்கள் சாரை சாரையாக சென்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
மதியம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.30 சதவீதமாக உயர்ந்தது. தேர்தல் முடிவடையும் நேரமான மாலை 6 மணி வரை, வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இறுதியாக, மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இன்னும் முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகவில்லை. இருந்த போதிலும், பீகார் வரலாற்றிலேயே இந்த தேர்தலில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பீகார் தேர்தலை பொறுத்தவரை, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. அதே சமயத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் களத்தில் உள்ளதால் பலமுனை போட்டி அங்கு நிலவுகிறது.
முன்னதாக, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணியும் வெளியிட்டன. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கல்வித் உதவித் தொகை, புதிய மெட்ரோ ரயில்கள் என பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அதே போல, ஆர்ஜேடி-காங்கிரஸ் மகா கூட்டணி சார்பில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம், விவசாயிகளுக்கு கடனுதவி போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.