அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத ஒரு மனிதன் விஜய் - வைகோ கடும் விமர்சனம்
''அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத ஒரு மனிதன் விஜய். ஆட்சிக்கு வந்து தற்போதே முதலமைச்சர் ஆகிவிட்டது போல விஜய் கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்'' என்று வைகோ பேசினார்.
சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாக குழு கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்று நிர்வாக குழு உறுப்பினர்களிடையே பேசியதாவது:
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் உங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகள் தருகிறோம் என்று கூறினார்கள்.
நான் 12 தொகுதிகள் என்பதை ஏற்க முடியாது என்று கூறினேன். மாலை 5 மணி வரை என்னுடைய செல்போனை அணைக்காமல் அருகிலேயே வைத்து காத்திருக்கிறேன். ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு நல்ல பதில் கூறுங்கள் என ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் கூறி அனுப்பினேன். அப்படியே செய்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றார்கள்.
ஆனால் மாலை 5 மணி வரை காத்திருப்பதாக நான் கூறியதை, வைகோ கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்று தெரிவித்து விட்டதாக ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பொய் கூறி விட்டனர். அந்த தேர்தலில் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் தர ஜெயலலிதா தயாராக இருந்தது பிறகு எனக்கு தெரிய வந்தது.
ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக ஓபிஎஸ் நான் கூட்டணிக்கு வர மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கூறிவிட்டார். அவ்வாறு ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியதால் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறவில்லை. ஆனால் மதிமுக அந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். 2011 ஆம் ஆண்டு கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் செய்த தவறுக்கு தற்போது பலனை அனுபவிக்கிறார்.
ஜெயலலிதா எனக்கு அருமையான ஒரு கடிதம் எழுதி இருந்தார். உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி விவகாரத்தில் முடிவெடுப்பது உங்கள் சொந்த உரிமை. ஆனால் உங்கள் கட்சிக்கு எது ஏற்றதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்'' என, அருமையான கடிதம் எழுதினார்.
தஞ்சாவூரில் கொளுத்தும் வெயிலில் ஒரு நாள் என்னை நேரடியாக சந்திக்க வந்தார். எம்ஜிஆருக்காக கூட ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை. ஆனால் உங்களுக்காக இறங்கி இருக்கிறார் என்று என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கூறினார். சிலரின் சதி செயல்களால் வர வேண்டிய கூட்டணி வராமல் போனது. குறைந்த இடங்கள் என்றாலும், ஏற்றுக் கொண்டு திமுகவுடன் பயணிக்க ஆரம்பித்து, இன்று வரையில் திமுக பற்றி ஒரு சொல் கூட விமர்சனம் செய்யாத கட்சி என்றால் அது மதிமுக தான்.
திமுகவில் இருந்து ஆர்.எஸ். பாரதி என்னை தொலைபேசியில் அழைத்து விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க கூறினார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு செல்லாமல், திருச்சியில் கூட தங்காமல் ஒரே ஓட்டமாக சென்னை ஓடி வந்துவிட்டார் விஜய். அதை பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வருத்தப்படாமல், நிதி கொடுக்கிறேன். எல்லோரும் என்னை பார்க்க வாருங்கள் என்று விஜய் அழைத்துள்ளார்.
எழவு கேட்பவர்கள் எழவு வீட்டிற்கு சென்று தான் எழவு கேட்பார்கள். யாரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து எழவு கேட்க மாட்டார்கள். தமிழ்நாடு வரலாற்றில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை விஜய் செய்திருக்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து துக்கம் விசாரித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என பேசினார். சட்டமன்றத்தில் கூட கூட்டத்தை நடத்தியவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தான் முதலமைச்சர் பேசியிருந்தார். ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசி உள்ளார்.
நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். திமுகவுக்கும், எங்களுக்கும் தான் போட்டி என்றெல்லாம் விஜய் பேசியிருக்கிறார். அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத ஒரு மனிதன் விஜய். ஆட்சிக்கு வந்து தற்போதே முதலமைச்சர் ஆகிவிட்டது போல விஜய் கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்'' என்று வைகோ பேசினார்.