தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இனி பாரத் நெட் சேவை! - அமைச்சர் பிடிஆர் தகவல்

தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இனி பாரத் நெட் சேவை! - அமைச்சர் பிடிஆர் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 12,552 கிராமங்களுக்கும் பார்த் நெட் சேவை கொண்டு செல்லப்படும் எனவும், கிராம சபை கூட்டத்தில் 10,000 கிராம பஞ்சாயத்துகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங்கில் பேசவுள்ளார் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப அரங்கில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

11,800 கிராமங்களுக்கு இணைய சேவை

அப்போது, “தமிழ்நாட்டில் ‘பாரத் நெட் திட்டம்’ கடந்த ஆட்சியில் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கவிருந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாகவும், கரோனா தொற்றின் காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் 2022ஆம் ஜூன் மாதம் மீண்டும் பைபர் நெட்வொர்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12,552 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கவுள்ளோம். இதுவரை 11,800 கிராமங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான ஆர்வம்

கிராமங்களில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள் முன்வராததால் இந்த பைபர் நெட் இணைப்புகளை வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கிராம பஞ்சாயத்து வாரியாகச் வழங்குநர்களை (Franchisee Partners) தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிற்கு குறைந்த அளவிலான தகுதியானவர்களே ஆர்வம் காட்டினர்.

கிராம பஞ்சாயத்து வாரியாக செயல்பட்டால் வருவாய் குறைவாக கிடைக்கும். அதேசமயம் வீட்டு இணைப்புகளுக்கும், நெட்வொர்க் பராமரிப்புக்கும் போதுமான வருவாய் ஈட்டுவதும் சவாலாக இருக்கும். மேலும், ONT (Optical Network Terminal) நிறுவுவதற்கான செலவை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனை கருத்தில்கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளாேம்.

மேலும், தொழில் பங்கீட்டாளர்களை கிராம பஞ்சாயத்து வாரியாக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்காமல், குறைந்த செலவில் ONT கருவிகளை நிறுவி, தரமான இணைய சேவையை வழங்க முடியும்” என தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் வீடியோ காலில் உரை

தொடர்ந்து பேசிய அவர், “காந்தி ஜெயந்தியன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி, 10,000 கிராமங்களில் உள்ள பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இது மாநிலம் முழுவதுமுள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, பாரத் நெட் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வழங்குமாறும், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வருகிற டான்பிநெட் தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். மேலும், பார்த் நெட் இணைப்பு கொடுக்கும்போது, உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையை பறிக்காமல் இருக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.

தமிழ்நாட்டில் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதிவேக நெட் இணைப்பு இருந்தால், கல்வி பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும். அரசு அலுவலகங்கள் வெளியிலிருந்து நெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனை மாற்றி அனைத்து அரசு அலுவலகங்களையும் பார்த் நெட் மூலம் இணைக்க உள்ளோம். இத்திட்டத்திற்கு ரூ.660 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

கிராமங்களுக்கு அளிக்கப்படவுள்ள இணையதளத்தின் வேகத்தை குறைக்க விரும்பவில்லை. மாதம் 199 ரூபாய் பிளானில் கொடுக்கவுள்ளோம். சுமார் 4 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இணையவசதி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு அளிப்பதற்கு, 5,196 கிராமத்திற்கு விண்ணப்பம் கேட்கப்பட்டது. அதில் 4,886 கிராமத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 12,552 கிராமங்களுக்கும் பார்த் நெட் சேவை கொண்டு செல்லப்படும்” என அவர் தெரிவித்தார்.