எஸ்ஐஆரில் ஒருதலைபட்சமாக இருப்பது தெரிந்தால் உடனடி தகவல் கொடுங்கள்! அமைச்சர் அறிவுரை!

எஸ்ஐஆரில் ஒருதலைபட்சமாக இருப்பது தெரிந்தால் உடனடி தகவல் கொடுங்கள்! அமைச்சர் அறிவுரை!

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது ஒருதலைபட்சமாகச் செயல்படுவது தெரிந்தால் உடனடியாக தகவல் கொடுங்கள் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அவர், “இந்தியாவின் ஜனநாயகம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை தங்கள் கைப்பாவையாக மாற்றி விட்டார்கள். தேர்தல் ஆணையம் எல்லாவித தில்லுமுல்லுகளையும் செய்யும் என்ற அச்சம் நமக்குள் உள்ளது. அதனால், நாம் மிகுந்த எச்சரிக்கையுடன், நுணுக்கமாக எஸ்.ஐ.ஆர் (SIR) திருத்தத்தை கவனிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபடும் BLO (Booth Level Officer) நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இருப்பினும், எவரேனும் ஒருதலைபட்சமாக பாஜக சார்பாக செயல்படுவதாகத் தெரிந்தால் உடனடியாக அதைப் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். அதற்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயகத்தின் சுதந்திரமான தேர்தல் முறையை பாதிக்கக் கூடிய முயற்சியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தைப் பார்க்கிறேன். நாம் அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட்டு, மக்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி, தமிழக மக்கள் அனைவரின் நம்பிக்கையின் அடையாளம். அதேபோல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் 100 சதவீத வெற்றியைப் பெறுவோம்” என்றார்.கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நிறைவாக 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அமைப்புரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக அமைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்படும் தவறுகளைச் சீர் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.