பேருந்தின் டயர் வெடித்து கோர விபத்து: 7 பேர் பலி

பேருந்தின் டயர் வெடித்து கோர விபத்து: 7 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இரவு நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (SETC) பேருந்து ஒன்று இரவு புறப்பட்டு சென்றது. திட்டக்குடி அடுத்த எழுந்தூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புக்களை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது எதிர் திசையில் (சென்னையில் இருந்து திருச்சி நோக்கி) வந்த இரண்டு கார்கள் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், இரண்டு கார்களும் பேருந்தின் அடியில் சிக்கி உருக்குலைந்தன.

கார்களில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கினார்களா? அல்லது வெவ்வேறு கார்களில் வந்தவர்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரகள்.