ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை - சச்சின் பைலட்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை - சச்சின் பைலட்

தமிழகத்தில் பாஜக ஒரு போதும் வெற்றி பெற முடியாது எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பதில் தவறில்லை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த முறை ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பதாக செய்திகள் வலம் வருகின்றன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் தவறு என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய தலைமை தான் இது குறித்த முடிவை எடுக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இதனிடையே இந்த முறை காங்கிரஸ், முதன் முறையாக தேர்தல் களம் காணவிருக்கிற தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இருப்பினும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாக கட்சித் தலைமை கூறியிருக்கிறது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் கூறினார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. ஆண்டாண்டு காலமாகவே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்தாலும் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார்.

அவரிடம் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பது குறித்து கேட்டதற்கு, “மற்ற கட்சிகளும் கேட்பது போல தான் காங்கிரஸ் நிர்வாகிகளும் கேட்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் என்ன நடந்தாலும் வருங்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக் கூடாது. தற்போதுள்ள தமிழ்நாடு அரசானது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களும் அரசின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் குறித்து பேசிய சச்சின் பைலட், “தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜக கொண்டு வந்த எஸ்.ஐ.ஆரால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ராஜஸ்தானிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மிகவும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நேர்மையான தேர்தலை என்பது தான் ராகுல் காந்தி உள்ளிட்ட எங்களது தலைவர்களின் எதிர்பார்ப்பு” என்றார்.