தமிழகத்தில் பாஜகவின் பாச்சா பலிக்காது... செந்தில் பாலாஜி பேச்சு
கோவையின் வளர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருவதாக, திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், 67-வது வார்டுக் குட்பட்ட 79-வது பாக எண் கொண்ட வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ திட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.
செந்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு இத்திட்டம் குறித்து விளக்கினார்.
பின்னர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு முதல்வர் வழங்கிய சாதனை திட்டங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து மக்களை நேரில் சந்தித்து வழங்கி வருகிறோம்.
தேவையான நிதியை ஒதுக்கி கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.
உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை மக்கள் கொடுத்தனர். அது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். ஒரு முகவரியில் குடியிருந்தவர், பின்னர் முகவரி மாறியிருப்பார்.
திமுகவை ஒரு போதும் யாராலும் வீழ்த்த முடியாது. தொடர்ந்து 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார். திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.