“பாஜக பேச பேச திமுக 200-ஐ தாண்டி வெல்லும்” – அடித்து சொல்லும் ஆர்.எஸ். பாரதி

“பாஜக பேச பேச திமுக 200-ஐ தாண்டி வெல்லும்” – அடித்து சொல்லும் ஆர்.எஸ். பாரதி
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என பாஜகவினர் கூறக்கூற, திமுகவின் வெற்றி விகிதம் அதிகரிக்கும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காளம், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மதுரையில் பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி, கடந்த தேர்தலிலும் இதுபோன்று மோடியும், அமித் ஷாவும் பேசிய நிலையில், 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றார்.
இது குறித்து ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: “கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி 8 முறையும், அமித்ஷா பல முறையும் வந்தனர். ஆனால், 39 என்பது 40 என்றுதான் கூடியது. 38ஆக குறையவில்லை. தற்போது நாங்கள் 159 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளோம். இவர்கள் பேச பேச எங்களுக்கு உற்சாகம் ஏறி 200-ஐ தாண்டுவோம்” எனத் தெரிவித்தார்.
இதேபோல தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், திமுக மற்றும் அதன் கூட்டணி ஒன்றும் தூசு அல்ல என்றார். அன்புமணி பாஜகவின் அருகில் இருப்பதால், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்ட அழைப்பை நிராகரிப்பதாகவும் வீரபாண்டியன் தெரிவித்தார்.