டி20 மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்தை சாய்த்தது தெ.ஆப்பிரிக்கா
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை தெ.ஆப்பிரிக்க மகளிர் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
அயர்லாந்து, தெ.ஆப்பிரிக்க மகளிர் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் 2 அணிகளும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த தெ.ஆப்பிரிக்க மகளிர் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீராங்கனை லாரா அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 115 ரன்களை விளாசினார். இதன்மூலம் அதிவேகமாக சதம் விளாசிய முதல் தெ.ஆப்பிரிக்க வீராங்கனை, ஒட்டுமொத்தத்தில் 6வது வீராங்கனை எனும் சாதனையை லாரா படைத்தார்.
இதையடுத்து 221 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தெ.ஆப்பிரிக்க வீராங்கனைகளின் புயல்வேக பந்துவீச்சுக்கு அந்த அணி வீராங்கனைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தபடி இருந்தது. 115 ரன்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இதனால் தெ.ஆப்பிரிக்க அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில், தெ.ஆப்பிரிக்க அணி வென்ற 3வது டி20 போட்டி எனும் பெருமையை பெற்றது.