உலக ஆணழகன் போட்டியில் மூன்றாவது முறையாக வென்று தமிழ்நாடு வீரர் சரவணன் மணி சாதனை
நாமக்கல் மாவட்டம் பார்சனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மணி மூன்றாவது முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
உடல் திறன் கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில் 16 -வது உலக ஆணழகன் போட்டி இந்தோனேஷியாவில் கடந்த 11 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் தலைமையில் 75 பேர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்திய ஆண்கள் அணியினர் 715 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர், பெண்கள் அணியினர் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் பார்சனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மணி என்பவர் இந்த முறையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்று "மிஸ்டர் யுனிவர்ஸ்" எனும் உலக ஆணழகன் பட்டத்தை தக்கவைத்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திக் ஈஸ்வர் என்பவர் நான்கு ஆண்டுகளாக உலக ஆணழகன் பட்டம் பெறுள்ளார். அதே போல் கேரளா மாநிலத்தை சேர்ந்த பூமிகா என்பவர் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார். இந்நிலையில் பதக்கம் வென்று சென்னை வந்த வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் மாலை மற்றும் சால்வை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன், “கடுமையான போட்டிகளுக்கிடையே இந்திய அணிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர். மூன்றாம் முறையாக உலக ஆணழகன் பதக்கம் வென்றுள்ள சரவணன், அதற்கு முன் கார்த்திக் ஈஸ்வரன் என தொடர்ச்சியாக நான்கு முறை வென்று சாதனை புரிந்துள்ளனர், கேரளாவைச் சேர்ந்த பூமிக்கு என்பவரும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடிபில்டிங் வீரர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்கான பயிற்சி, உணவு செலவு, மற்றும் பயணசெலவு அதிகரிப்பதால் அரசு உதவி புரிய வேண்டும். பாடிபில்டிங் போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று பாஸ்கரன் கூறினார்.
மூன்றாவது முறையாக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற சரவணன் மணி பேசுகையில், ”நாமக்கல் மாவட்டம் பார்சனூர் கிராமத்தில் இருந்து பயிற்சியை துவங்கி 16 ஆண்டுகளாக பயிற்சியில் உள்ளேன். இரண்டாம் முறை உலக ஆணழகன் வென்றவுடன் தான் வருமான வரி துறையில் ஆய்வாளர் பதவி கிடைத்தது. தற்போது மூன்றாம் முறையும் ஆணழகன் போட்டியில் வென்றுள்ளேன்.
இந்தியாவுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த நாங்கள் தொடர்ச்சியாக பதக்கம் வெல்வது மகிழ்ச்சி. இளைஞர்கள் பாடிபில்டிங் பயிற்சியை துவங்குகிறார்கள். இடையில் சிலர் அதனை விட்டுவிடுகிறார்கள். விடாமுயற்சியாக பயிற்சி செய்து போட்டிகளில் பங்கேற்றால் இலக்கை அடையலாம்" என்று சரவணன் மணி தெரிவித்தார்.