102 போட்டிகளில் 418 விக்கெட்டுகள்.. வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்

102 போட்டிகளில் 418 விக்கெட்டுகள்.. வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஜேக் வெதர்லெட் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் ஜமிந்தா வாஸ் 111 போட்டிகளில் 355 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் 78 போட்டிகளில் 317 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 73 போட்டிகளில் 313 விக்கெட்டுகளை வீழ்த்தி 5ஆம் இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளுடன் 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.