முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சீன் அபோட் விலகல் - நெருக்கடியில் ஆஸி., அணி
ஆஷஸ் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சீன் அபோட் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகிய நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் அறிமுக வீரர்களான ஜேக் வெதர்லெட், பிரெண்டன் டாகெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல் போட்டி தொடங்க சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சீன் அபோட் ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் போட்டியில் நியூ சௌத் வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட் இருவரும் காயம் காரணமாக மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது.
மேற்கொண்டு இருவரது காயத்தின் தன்மையை அறிவதற்காக ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹேசில்வுட் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சீன் அபோட் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கான மாற்று வீரர் குறித்த எந்தவொரு அறிவிப்பும் ஆஸி., அணி நிர்வாகம் வெளியிடப்படவில்லை.
ஏற்கெனவே அணியின் கேப்டன் பாட் காம்மின்ஸ் காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடுவார் என்பதிலும் உறுதி இல்லாத சூழ்நிலையில், தற்போது சீன் அபோட்டும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.