BREAKING: இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தெ.ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜெய்ஸ்வால் (22 ரன்கள்), ரோஹித் சர்மா (14 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனினும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி, கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக கோலி விளையாடினார். அவர்களின் விக்கெட்டை தெ.ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
முதலில் கெய்க்வாட்டும், இதையடுத்து விராட் கோலியும் அடுத்தடுத்து சதத்தை பதிவு செய்தனர். கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோலி 90 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோலியின் 53வது சதமாகும். அதேபோல், சர்வதேச அரங்கில் அவரின் 84வது சதமாகும்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 39.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை சேர்த்திருந்தது.
இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அதிரடியில் கலக்கினர். கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 66 ரன்களை குவித்தார்.
முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 359 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தெ.ஆப்பிரிக்க அணி களம் புகுந்தது.
ஆரம்பம் முதல் அதிரடியாக தென்னாப்பிரிக்க வீரர்கள் விளையாடினர். பிரமாண்ட ஸ்கோரை நினைத்து கவலைப்படாமல், இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி அவர்கள் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். அதிகபட்சமாக அந்த அணி வீரர்கள் மார்கரம் 110, பவுமா 46, ப்ரீட்ஸ்க் 68, ப்ரவீஸ் 54 ரன்களை குவித்தனர்.

இந்திய அணியின் கட்டுப்பாட்டின்கீழ் போட்டி இருப்பது போல தோன்றியது. ஆனால் தெ.ஆப்பிரிக்க வீரர்களின் அதிரடியால் அந்த அணியின் கட்டுப்பாட்டில் போட்டிச் சென்றது. 49.2 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது, இன்றைய போட்டியில் சதம் விளாசிய தெ.ஆப்பிரிக்க வீரர் மார்கரமுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 1-1 என்று சமநிலையில் உள்ளன.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 6-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.