கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்... துணை நடிகருக்கு முன் ஜாமீன்!

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்... துணை நடிகருக்கு முன் ஜாமீன்!

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது, சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் யூடியூப் வலைதளத்தில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இது தொடர்பாக துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை நடிகர் ரவிச்சந்திரன் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி துணை நடிகர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

துணை நடிகர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே. ராஜசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரவிச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார். அப்போது அவர், எந்த வித உள் நோக்கத்தோடும் ரவிச்சந்திரன் அவ்வாறு பேசவில்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதற்கு காவல் துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதால், துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே. ராஜசேகர், துணை நடிகர் டி. ரவிசந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.