லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தென்காசி அருகே பயங்கரம்

லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தென்காசி அருகே பயங்கரம்

கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் 3 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்தும், அருகில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகளில் இருந்தும் தினந்தோறும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகின்றன.

இந்த லாரிகள் அனைத்தும் மருதம்புத்தூர் வழியாக ஆலங்குளத்தை அடைந்து, அங்கிருந்து கேரளாவுக்கு செல்கின்றன. அந்த வகையில், கண்டபட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கனிமவளத்தை ஏற்றிக்கொண்டு கேரளா லாரி ஒன்று நேற்று ஆலங்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

கண்டபட்டி விலக்கு பகுதிக்கு வந்தபோது, திடீரென ஒரு கும்பல் லாரியை வழிமறித்துள்ளது. இதனால் டிரைவர் லாரியை சற்று மெதுவாக இயக்கினார். அப்போது திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்த அந்த கும்பல், லாரி மீது வீசியது.

இதில் லாரி தீப்பிடித்து எரிந்ததில், ஓட்டுநரான செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (38) படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த மற்ற லாரி டிரைவர்கள், உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் ஓட்டி வந்த லாரியை அதே இடத்தில் விட்டுவிட்டு சென்றால் மீண்டும் அந்த கும்பல் லாரியை சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதனை மருதம்புத்தூர் மெயின் ரோட்டில் ஓரமாக நிறுத்திவிட்டு, ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

லாரி டிரைவர் சுப்பிரமணியன் மீதான தனிப்பட்ட பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா? இல்லையெனில், கனிமவளங்களை எடுக்கும் குவாரிகளுக்கு எதிராக நடைபெற்றதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கனிம வளம் ஏற்றி வரப்பட்ட சம்பந்தப்பட்ட குவாரிக்கு மட்டும் பாஸ் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் அருகிலேயே உள்ள மற்றொரு குவாரிக்கு பாஸ் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருவதாக தெரிகிறது. இதனால் தொழில் போட்டி காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.