மூன்று மாதங்களுக்கு முன்பு கடித்த கீரிப்பிள்ளை... 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
கீரிப்பிள்ளை கடித்து முறையான சிகிச்சை பெறாமல் இருந்த சிறுவன் உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்தவர்கள் முத்து-தேவி தம்பதி. இவர்களது 7 வயது மகன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டில் நிறைய கோழிகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோழியை பிடிப்பதற்காக கீரிப்பிள்ளை வந்துள்ளது. அது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கையை கடித்துள்ளது. இதனால் வலி தாங்காமல் சிறுவன் கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் உடனே சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு ஊசி போடப்பட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து சிறுவன் வேறெதுவும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமாகியுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததுள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (ஜன.26) நள்ளிரவு காய்ச்சல் அதிகமாகி அந்த சிறுவன் கீரிப்பிள்ளை போல செய்கை செய்து திடீரென உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து சிறுவனின் உடலை மருத்துவர்கள் உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்காமல், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்த நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கீரிப்பிள்ளை போல செய்கை செய்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிரிழந்த சிறுவனின் தந்தை முத்து கூறுகையில், '' கீரிப்பிள்ளை கடித்ததற்கு மருந்து இல்லை என்றால், எதற்கு மருத்துவர்கள்? ஏழு வருடம் கஷ்டப்பட்டு எனது மகனை வளர்த்து வந்தேன். மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளித்து இருந்தால் எனது மகனை காப்பாற்றி இருக்க முடியும். இதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே காரணம், எனது மகனின் மரணத்திற்கு தீர்வு வேண்டும்.'' என கண்ணீர் மல்க கூறினார்.