குளிர்காலத்தில் மோசமாகும் மூட்டு வலி - உடனடி தீர்வுக்கு தினமும் இரவு இதை ஃபாலோ பண்ணுங்க!

குளிர்காலத்தில் மோசமாகும் மூட்டு வலி - உடனடி தீர்வுக்கு தினமும் இரவு இதை ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொரு காலநிலையும் ஒருவருக்கும் சாதகமாக இருந்தால் மற்றொருவருக்கு பாதகமாக அமையும். அப்படி தான், பனிக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம். இவை இதமான அனுபவத்தை கொடுத்தாலும் கீல்வாதம் (Arthritis), மூட்டு உபாதைகள் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகுந்த வேதனை தரும் காலமாகும்.

வெப்பநிலை குறையும்போது, முழங்கால், இடுப்பு மற்றும் முதுகு போன்ற மூட்டுகளில் வலி, விறைப்பு மற்றும் அசௌகரியம் ஆகியவை பொதுவாக அதிகரிக்கும். மற்ற காலநிலை போல் இல்லாமல், மூட்டு வலி குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். ஏன், எந்த பிரச்சனையும் இல்லாதவர்களுக்கு கூட கால் வலி ஏற்படலாம். நீங்களும் இந்த பிரச்சனையை அனுபவிக்கிறீங்களா? அப்போ இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான்.

குளிர்காலமும் மூட்டு வலியும் எப்படி தொடர்புடையவை? இந்த சிரமமான காலகட்டத்தில் வலியைக் குறைத்து, மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

குளிர் காலத்தில் மூட்டு வலி அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள் உள்ளன:

ரத்த நாளங்கள் சுருங்குதல் : குளிர்ச்சியான காலநிலையில், உடலின் மையப் பகுதியின் வெப்பத்தைப் பாதுகாக்க, உடலின் விளிம்புகளில் (கைகள், கால்கள் மற்றும் மூட்டுகள்) உள்ள ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் மூட்டுகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, மூட்டுகள் விறைப்படைவதுடன், அதிக வலியுடனும் காணப்படுகின்றன என்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அமீத் குமார் அகர்வால்.

வளிமண்டல அழுத்த மாறுபாடுகள்: குளிர்காலத்திற்கு முன்னதாகவோ அல்லது வானிலை மாறும்போதோ வளிமண்டல அழுத்தம் குறைகிறது. இந்த அழுத்தம் குறையும்போது, மூட்டுகளைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்கள் (Soft Tissues) சற்றே வீங்குகின்றன. இந்த வீக்கம் மூட்டுகளுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கிறது.

தசை இறுக்கம் மற்றும் குறைந்த செயல்பாடு: குளிர் காரணமாக தசைகள் இயற்கையாகவே இறுக்கமடைகின்றன. இந்த இறுக்கம் மூட்டுகளின் மீது கூடுதல் அழுத்தத்தை அளித்து வலியை ஏற்படுத்துகிறது. மேலும், குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக வீட்டிற்குள் முடங்கி, உடல் செயல்பாடுகளைக் குறைப்பதால், மூட்டுகள் மேலும் விறைப்படைகின்றன, தசை பலவீனமும் அதிகரிக்கிறது.

நீரிழப்பு மற்றும் எடை அதிகரிப்பு: குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருப்பதால் நீர் அருந்துவதையும் குறைத்து விடுகிறோம். இதனால் மூட்டுகளை உயவூட்டும் திரவம் (Synovial Fluid) தடிமனாகி, மூட்டு விறைப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், இந்த பருவத்தில் ஏற்படும் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பழக்கங்கள் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த காரணங்கள் மூட்டுவலியை ஏற்படுத்தினாலும், சில அன்றாட பழக்கங்கள் மற்றும் உணவுமுறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையை தடுக்கலாம்.

கோப்புப்படம்

உடலை கதகதப்பாக வைத்திருங்கள்: கைகள், கால்கள் மற்றும் மூட்டுகளைப் பாதுகாக்க கையுறை, சாக்ஸ், முழங்கால் மற்றும் மூட்டு உறைகள் (Knee/Joint sleeves) போன்றவற்றை அணியுங்கள். வெதுவெதுப்பான குளியல், ஹீட்டிங் பேட் அல்லது வெந்நீர் ஒத்தடம் ஆகியவை விறைப்பைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தற்காலிக நிவாரணம் அளிக்கும். உங்கள் வீட்டின் வெப்பநிலையை 18°Cக்கு குறையாமல் பராமரிப்பது நல்லது.

சுறுசுறுப்பாக இருங்கள்: விறைப்பைத் தடுக்கவும், மூட்டுகளை நெகிழ்வாக வைத்திருக்கவும் வீட்டுக்குள்ளேயே மெதுவாக நடப்பது, நீட்சிப் பயிற்சிகள் (Stretching), யோகா அல்லது Pilates போன்ற குறைந்த தாக்கமுள்ள பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். வெதுவெதுப்பான எண்ணெயைக் (நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்) கொண்டு மெதுவாக மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வலியைத் தணிக்கும்.

உகந்த உணவுமுறை:

இஞ்சி, மஞ்சள், பூண்டு, பெர்ரி பழங்கள், வால்நட், ஆளி விதைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகமாகச் சேர்க்கவும். தாகம் இல்லாவிட்டாலும், தினமும் 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் அல்லது மூலிகை டீ, காய்கறி சூப்கள் போன்ற சூடான திரவங்களை அருந்துவது மூட்டுகளின் உயவூட்டலைப் பராமரிக்க உதவும்.

சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் D சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கும், வலி நிவாரணத்திற்கும் உதவலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் அதிகப்படியான வறுத்த உணவுகள் வீக்கத்தைத் தூண்டலாம், எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

எடையைக் கட்டுப்படுத்துதல்: உடல் எடையில் ஏற்படும் சிறிய அதிகரிப்பு கூட மூட்டுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையைச் சமநிலையில் வைத்திருப்பது மூட்டு வலி தீவிரமடைவதைத் தடுக்க சிறந்த வழியாகும்.