பல்வேறு துறைகளில் வீரதீர செயல்களை புரிந்தோருக்கு குடியரசு தின விழாவில் விருது வழங்கி கௌரவித்த முதல்வர்
இன்று குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் வீர தீர செயல்களை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
77வது குடியரசு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படட்டது. இந்த விழாவிற்கு வருகைபுரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, வான்படை, கடலோர காவல்படை, தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை தமிழ்நாடு முதல்வர், ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரியாக 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனையடுத்து அணிவகுப்பு மேடையில் முதலமைச்சர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
விருதுகள் மற்றும் பதக்கம் பெற்றவர்கள் விவரம்
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் 2026
1. வீ. சங்கர் - தீயணைப்போர் ஓட்டுநர் நீலகிரி மாவட்டம்.
2. பா.சுரேஷ் - தீயணைப்போர் நீலகிரி மாவட்டம்
3. செ.ரமேஷ் - தீயணைப்போர் நீலகிரி மாவட்டம்
4. பீட்டத் ஜான்சன் கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாடு அரசு, ஓவ்வொரு ஆண்டும் வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள்/பொதுமக்களுக்கு அண்ணா பெயரில் பதக்கங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1,00,000க்கான காசோலையும், ரூ.9,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், 2026
தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இவ்வாண்டு (2026) இப்பதக்கமானது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மு.கலிமுல்லா என்பவருக்கு வழங்கப்பட்டது. பதக்கத்துடன் ரூ.5,00,000/-கான கேட்புக் காசோலை (Demand Draft - DD) மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது
மாநில அளவில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதிக உற்பத்தித் செய்யும் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின்போது இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த க. வீரமணி என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், சிறப்பு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
காந்தியடிகள் காவலர் பதக்கம், கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு, ரூ.40,000க்கான காசோலையும் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டு இப்பதக்கம் கீழ்கண்ட காவல்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
1. ப.நடராஜன் - காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, - விழுப்புரம் மண்டலம்.
2. திரு மா. சத்யாநந்தன் - காவல் உதவி ஆய்வாளர், ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.
3. சு.மணிகண்டன் - காவல் உதவி ஆய்வாளர், சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
4. க.நடராஜன் - காவல் உதவி ஆய்வாளர், புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம்.
5. வா.பெ. கண்ணன் - தலைமைக் காவலர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம்.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது
2024-ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்களுள் சிறப்பாக பணிகளைச் செய்தல், மிகவும் சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை உடனடியாக குறைத்தல், நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சிறந்த 3 காவல்நிலையங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் முதல் 3 இடம்பிடித்த காவல் நிலையங்களுக்கான கோப்பையை அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.
முதல் பரிசு: மதுரை மாநகரம்
இரண்டாம் பரிசு: திருப்பூர் மாநகரம்
மூன்றாம் பரிசு: கோயம்புத்தூர் மாவட்டம்.