சிவகாசியில் மாணவி விபரீத முடிவு - தனியார் கல்லூரி முதல்வர் கைது

சிவகாசியில் மாணவி விபரீத முடிவு - தனியார் கல்லூரி முதல்வர் கைது

சிவகாசி தனியார் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் அந்த கல்லூரியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த சாட்சியாபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவி சோலைராணி, ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது அந்த மாணவியும் சக மாணவர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த மாணவனின் பிறந்த நாளன்று அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நண்பர்களுக்கு மட்டும் தெரியும்வண்ணம் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை ஒரு மாணவி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கல்லூரியின் அலுவலக உதவியாளர் மணிமாறனுக்கு அனுப்பியுள்ளார். அவர் அதை கல்லூரி முதல்வர் அசோக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கல்லூரி முதல்வர் அசோக்  

இந்த புகைப்படம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் அசோக் மாணவியை கண்டித்ததோடு, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி தனது தாயுடன் கல்லூரிக்கு வந்த மாணவி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து அன்று இரவே மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவாயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு கடந்த ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.‌ மேலும் போலீஸார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

தலைமறைவான அலுவலக உதவியாளர் மணிமாறன்   

அதன்பேரில் மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி நேற்று திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இதனை அறிந்த மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் வந்த மல்லி காவல் நிலைய போலாசார் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கை தற்கொலை வழக்காக முதலில் பதிவு செய்திருந்த நிலையில் அதனை மாற்றி, கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் கல்லூரி அலுவலக உதவியாளர் மணிமாறன் ஆகியோர் மீது சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டு சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், சிவகாசி நீதிமன்றம் கல்லூரி முதல்வர் அசோக்கிற்கு ஜாமீன் வழங்கியது. மேலும் தலைமறைவான கல்லூரி அலுவலக உதவியாளர் மணிமாறனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.