‘‘பாஜக அணியில் இருந்து வெளியேற விரும்பினார்’’ - அஜித் பவார் மரணம் பற்றி மம்தா சந்தேகம்
‘‘பாஜக கூட்டணியில் இருந்து அஜித் பவார் விலக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று காலை 8.45 மணி அளவில் விமான விபத்தில் உயிரிழந்தார். சிறிய ரக விமானம் ஒன்றில் மும்பையில் இருந்து பாரமதி சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மம்தா பானர்ஜி சந்தேகத்தை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘எதிர்க்கட்சிகளின் நிலை என்னாகுமோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆளும் கட்சியுடன்தான் (பாஜக) இருந்தார். ஆனால், அஜித் பவார் பாஜக அணியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அறிக்கை அளித்ததாக நான் அறிந்தேன். இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் முறையான விசாணையை நான் கோருகிறேன். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. வேறு எந்த ஏஜென்சி மீதும் நம்பிக்கை இல்லை. அனைத்து ஏஜென்சிகளும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டுவிட்டன.
உண்மையில் இது ஒரு மிகப் பெரிய இழப்பு. இன்று அவர் பாஜக அணியில் இருந்தார். ஆனால், நாளை அவர் தனது கட்சியின் உண்மையான இடத்துக்குத் திரும்புவார் (சரத் பவாருடன் சேருவார்) என எதிர்பார்க்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்பி கங்கனா ரணாவத், இப்படிப்பட்ட அற்பமான விஷயங்களைப் பேசுவதற்குப் பதிலாக அவர் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத், ‘‘இன்று காலை இப்படி ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்திருப்பது குறித்து நாங்கள் அனைவரும் துக்கத்தில் இருக்கிறோம். பலரும் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் அனைவரும் விவாதித்து வருகிறோம். எனவே, இதுபோன்ற நேரத்தில் இப்படிப்பட்ட அற்பமான விஷயங்களைப் பேசுவதற்குப் பதிலாக அவர் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக அஜித் பவார் இன்று காலை 8.10 மணி அளவில் மும்பையில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் புறப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரும், உதவியாளரும் உடன் சென்றுள்ளனர். விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிட். என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்ட 16 ஆண்டுகள் பழமையான VT-SSK என பதிவுசெய்யப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். சுமித் கபூர், சம்பவி பதக் ஆகிய இரண்டு விமானிகள் விமானத்தை இயக்கி உள்ளனர்.
மும்பையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாராமதிக்கு காலை 8.30 மணிக்கு விமானம் சென்றுள்ளது. எனினும், அது முதல் தரையிறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததை அடுத்து 8.42 மணிக்கு இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றுள்ளது. எனினும், 8.45 மணி அளவில் ரேடாரில் இருந்து மறைந்த அந்த விமானம், இறுதியில் ஓடுபாதை 11ன் தொடக்கப் பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானது.
பாராமதியில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதி அந்த விமான நிலையத்தில் இல்லாததாலும் பாதுகாப்பான தரையிறக்கம் சாத்தியமற்றதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. எனினும், அஜித் பவார் அணிந்திருந்த கைக் கடிகாரத்தின் மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமான விபத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விமான நிறுவனத்தின் உரிமையாளர் வி.கே. சிங், விமானம் 100% பாதுகாப்பானது என்றும் அனுபவம் வாய்ந்த விமானிகளால் இயக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், அஜித் பவார், விமானிகள், அஜித் பவாரின் பாதுகாவலர், உதவியாளர் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.