நாகர்கோவிலில் பெண் குழந்தையை கடத்திய நபர் கைது - 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!
நாகர்கோவிலில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் (22). இவரது மனைவி முஸ்கான் (19). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவுக்காக குமரி மாவட்டம் வந்திருந்தனர்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த பகுதிக்கு வந்து ரஞ்சனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை சாரா (3) திடீரென அழுததால் ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு உணவு வாங்கி கொடுப்பதாக கூறி விட்டு குழந்தையை தூக்கி சென்று விட்டார். சுமார் ஒரு மணி நேரமாகியும் குழந்தையை காணாததால் சந்தேகம் அடைந்த ரஞ்சன் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து அந்த ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில் குழந்தையை தூக்கி சென்றது நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்பது தெரிய வந்தது. உடனடியாக சைபர் கிரைம் மூலம் போலீஸார் யோகேஷ்குமாரின் செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று பரிசோதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றும், நலமாக இருப்பதும் தெரிய வந்தது. யோகேஷ்குமாரை கோட்டாறு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.