பனையூருக்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? - விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்

பனையூருக்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? - விஜய்யை கிண்டலடிக்கும் சீமான்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து மக்களை வாக்களிக்கச் சொல்வாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி. என் நண்பனாக இருக்க ஒரு தகுதியும் தேவையில்லை. ஆனால் எதிரியாக இருக்க நிறைய தகுதிகள் வேண்டும். அந்த வகையில் நான் தவெக தலைவர் விஜய்யை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை மட்டுமே முன்வைத்தோம். ஆனால் நாங்கள் விஜயைவிமர்சிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை.

அரசியல் களத்துக்கு வந்தால் கேள்விகேட்கப்படும். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பனையூரில் வைத்து, அங்கு வந்து ஓட்டு போடுங்கள் என்று சொல்வாரா? பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு ஆலமரத்துக்கு வருவார்.

ஆனால் பனையூர்க்காரர் தன் வீட்டில் மட்டுமே தான் பஞ்சாயத்து நடத்துவேன், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என மறுக்கிறார். நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக இருக்கிறார். அவரால் ஒரு மணி நேரம் என்னைப் போல் பேச முடியுமா? தெரிந்தால் தானே பேசுவார். வேலுநாச்சியார், அம்பேத்கர் படங்களை வைத்தால் அச்சமூக மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என நினைக்கிறார்.

ஆனால் அயோத்திதாசன், இரட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் என்னோடு இருக்கிறார்கள். பெரியாரையும் கூட நான் எதிர்த்து அவதூறு பேசவில்லை. அவர் பேசியதை தான் எடுத்துச் சொன்னேன்.

இவ்வாறு அவர் பேசினார்.