ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம் - மகளிர் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்

ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம் - மகளிர் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்

திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலில் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம் என முதல்வர் பெருமையுடன் கூறினார்.

திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு (வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு) திருப்பூர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் நடைபெற்றது. இதற்காக ஒன்றரை லட்சம் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும், மாநில முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், '' நிறைய பேர், “இப்போது எதற்கு மகளிர் மாநாடு?” என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, பெண்களின் முன்னேற்றமே, நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே, சமூகத்தின் வெற்றி.

இது பெண்களுக்கான ஆட்சி. மகளிர் அனைவரும் இன்றைக்கு அவ்வளவு மனநிறைவாக, மகிழ்ச்சியாக, அதிகாரத்துடன் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திலேயே என்னுடைய அம்மா போன்று நிறைய பேர் இருக்கிறீர்கள். எனக்குச் சகோதரிகளாக நிறைய பேர் இருக்கிறீர்கள். ஏன், என்னுடைய மகள்களாக எத்தனையோ பேர் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய வெல்லும் தமிழ்ப் பெண்களைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

பெண்களுக்காக நாம் செயல்படுத்தும் திட்டங்களில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துச் சொல்லி, நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக கொடுக்கிறோம். குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் தலைமுறை தலைமுறையாக உழைக்கும் பெண்களின் உரிமை அது. இதுவரை ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் நாம் மொத்தம் 28 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இது சமூகத்தில் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் இம்பாக்ட் உருவாக்கியிருக்கிறது.

அதேபோன்று, நம்முடைய மற்றொரு புரட்சித் திட்டம்தான் மகளிர் விடியல் பயணம். பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்தே பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்திற்குத்தான். நாம் ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலில் பெண்களின் வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்.

இந்த விடியல் பயணத்தில் உங்களுக்கு ஒரு சுதந்திரமும், முக்கியத்துவமும் கிடைக்கிறது இல்லையா? அதுதான் என் கனவு, என் லட்சியம் எல்லாம். பல மகளிர் காலையிலேயே பேருந்தில் ஏறிச் சென்று, பூ விற்பது, கீரை – காய்கறிகள், மீன் விற்பனை செய்வது என்று சிறுதொழிலில் ஈடுபடுகிறார்கள். உரிமைத்தொகையாகக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து, விடியல் பயணம் திட்டத்தால் மாசம் ஆயிரம் ரூபாயைக் கூடுதலாக மிச்சம் செய்கிறார்கள். இவ்வாறு இதுவரை தொள்ளாயிரம் கோடி முறை பயணம் செய்திருக்கிறார்கள்.

அடுத்து, அரசுப் பள்ளியில் படித்து முடிக்கும் பெண்கள், கல்லூரியில் சேரும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தோம். இதை எவ்வாறு தடுக்கலாம் என்று சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம். சுமார் ஏழு லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், இப்போது பள்ளி முடிக்கும் பெண் பிள்ளைகள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பே படிப்பைப் பாதியில் நிறுத்திய பெண்களும் மீண்டும் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். தன்னுடைய மகனுடன் சேர்ந்து கல்லூரிக்குச் செல்லும் ஒரு அம்மாவைக் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நான் பார்த்தேன். இதுதான் புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றி.

அதே நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தால், ஜப்பானிய மொழி கற்று, வேலை கிடைத்த மாணவி, அந்த மொழியிலேயே எனக்கு நன்றி சொன்ன வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு நான் முதல்வன் திட்டத்திலும் கடந்த நான்கு கல்வியாண்டுகளில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 543 பயிற்சிச் சான்றிதழ்களை மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறோம். அவர்களில் பல பேரும் இப்போது நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

என்னதான் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாலும், உங்களுக்கு நடைமுறையில் இருக்கும் பெரிய சுமை என்பது, சமையலறை. அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும் பெண்கள்தான், சமையல் வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது. இதனால், சில நேரங்களில், குழந்தைகளுக்குக் காலை உணவை சரியாகத் தயார் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. பெண்களின் சமையலறைச் சுமையையும் குறைக்க வேண்டும் - குழந்தைகளுக்கும் சத்தான - சுவையான உணவைப் பரிமாற வேண்டும் என்றுதான் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனால், ஒவ்வொரு நாளும் 19 லட்சத்தி 34 ஆயிரத்து 69 குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள். அந்தக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் தங்கள் பாரம் கொஞ்சம் குறைந்த நிலையில் நிம்மதியோடு சாப்பிடுகிறார்கள்.'' என பேசினார்.

மாநாட்டில் பங்கேற்ற உமா மகேஸ்வரி நம்மிடம் கூறுகையில், ''இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடு. இங்கு வந்துள்ள மகளிருக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். எந்த தள்ளு முள்ளும் இல்லாமல், அனைவரும் நேர்த்தியாக வந்து அமரும்படி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட ஸ்நாக்ஸ் , கூல் டிரிங்க் எல்லாம் அந்தந்த நாற்காலியில் வைக்கப்பட்டிருந்தது. மாநாடு முடிந்து திரும்ப போகும்போது உணவும் வழங்கப்பட்டது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இங்கு வந்து செல்கிறோம்.'' என்றார்.