நெல்லையில் தொடங்கிய புலிகள் கணக்கெடுக்கும் பணி

நெல்லையில் தொடங்கிய புலிகள் கணக்கெடுக்கும் பணி

நெல்லையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி  தொடங்கியது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். புலிகளின் எண்ணிக்கை, அதன் பரவல், வாழ்விட நிலைகளை அறிவியல் முறையில் மதிப்பீடு செய்வதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம், அம்பாசமுத்திரம் உள்பட ஏழு வனச் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில், 2025-26 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கி வரும் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, ஏழு வனச்சரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வனப் பணியாளர்களுக்கு, புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ‘M-STrIPES’ என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு பின் இன்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

செயலி மூலம் எப்படி புலிகளை கணக்கெடுப்பது என்பது குறித்து வனத்துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
செயலி மூலம் எப்படி புலிகளை கணக்கெடுப்பது என்பது குறித்து வனத்துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த பணியின் போது, புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதுடன் மட்டுமல்லாமல், அவற்றின் இரை உயிரினங்களின் கிடைப்புத் தன்மை, வாழ்விடத்தின் தரம் மற்றும் மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் அழுத்தங்கள் ஆகியவையும் இக்கணக்கெடுப்பு மூலம் விரிவாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

அம்பாசமுத்திரம் கோட்டத்தில், மொத்தம் 34 பீட்களில் இந்த பணி நடைபெற்றது. ஒவ்வொரு பீட்டிலும், வனச்சரகர்கள் தலைமையில் 5 பணியாளர்கள் என மொத்தம் சுமார் 170 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இது தவிர, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, பாபநாசம், களக்காடு, மணிமுத்தாறு ஆகிய வன சோதனைச்சாவடிகள், இன்று முதல் 24 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை என நிறுவப்பட்டிருக்கும் அறிவிப்பு போஸ்டர்
சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை என நிறுவப்பட்டிருக்கும் அறிவிப்பு போஸ்டர்

மேலும், மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணை, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட, வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணி குறித்த இறுதி அறிக்கை, 2027-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.