"ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது... படியவும் விடமாட்டேன்..." தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு!

"ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது... படியவும் விடமாட்டேன்..." தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு!
மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் "ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது, படியவும் விடமாட்டேன்" என பேசினார்.
தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ள நிலையில் க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், "ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது. படியவும் விடமாட்டேன். இதற்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்போ இருக்கிறவங்க மாதிரியோ இந்த விஜய் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா தொட மாட்டேன். அதனை தொட வேண்டிய அவசியமில்லை. நீங்க என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போறதுக்கோ, அண்டி பிழைக்கவோ, அடிமையாய் இருக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை.” என பேசினார்.