தவெக தலைவர் விஜய் திரைப்பட ஹீரோ கிடையாது என்றும் தமிழ்நாட்டிற்கான ஹீரோ என்றும் அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு அருகே பூஞ்சேரியில் தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தவெகவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள விசில் சின்னத்துடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வந்தவுடன் தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அரங்கம் முழுவதும் அந்த சத்தம் எதிரொலித்த நிலையில், காதில் விரல் வைத்து விஜய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சி தொடங்கியதும், மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழி போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். தங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், திமுகவை வீழ்த்தும் ஒரே தலைவர் விஜய்தான் என்று கூறினார். எம்ஜிஆரை போன்று புகழும் வரலாறும் விஜய்க்கு கிடைத்துள்ளது என்றும், ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்காக அவர் வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
“நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதுகளில் சென்று விசில் அடித்துவிடாதீர்கள்; ஓட்டுப் போய்விடும். பஸ் ஸ்டாண்டிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் வயதானவர்களிடம் விசில் அடிக்காதீர்கள், அவர்கள் தடுமாறிப் போவார்கள். ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தவெக தொண்டர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.