மது குடிக்காதவர்களிடம் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் - எப்படி கண்டறிவது?

உலகளவில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் ஒன்று ஆல்கஹாலிக் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease - NAFLD). அதிலும், இந்தியாவில் மட்டும் 38.6% சதவீத மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக Prevalence of Non-alcoholic Fatty Liver Disease in India: A Systematic Review and Meta-analysis என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) ஏற்படுவதற்குப் பல காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பங்களிக்கின்றன.
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்புச் சேர்வது, உடல் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்கு சரியாகப் பதிலளிக்காமல் இருப்பது, வகை 2 நீரிழிவு நோய், ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் மோசமான வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றனர். இந்த நோய் தீவிரமடைந்த பின் தான் பாதிப்பு தெரியவரும் என்பதால் இது கவலையை மேலும் அதிகரிப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோயைக் கண்டறிய கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (LFT) அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என்றாலும், சில ஆரம்பகால உடல் மற்றும் வாழ்க்கை முறை அறிகுறிகள் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயை மக்கள் கண்டறியலாம் என இரைப்பை நோயியல் நிபுணர் (Gastroenterologist) டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரல் நோயால் ஏற்படும் சோர்வு என்பது சாதாரணமாக நாம் சந்திக்கும் சோர்வு அல்ல. இது போதுமான ஓய்வுக்குப் பிறகும், தொடர்ச்சியான குறைந்த ஆற்றல் உணர்வாக இருக்கும். ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு கல்லீரலில் குவியும்போது, இந்த ஆற்றல் செயல்முறை மெதுவாகிறது.
காலப்போக்கில், குறிப்பாக பகல் நேரத்தில், சோர்வாக அல்லது மந்தமாக உணரும் சூழல் ஏற்படும். பெரும்பாலானோர் இதை மன அழுத்தம் அல்லது வேலை பழு என நினைத்து கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். ஆனால், தினசரி சோர்வு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர். கொழுப்பு கல்லீரலின் மிகவும் வெளிப்படையான அறிகுறிகளில் ஒன்று மத்திய உடல் பருமன் (Central Obesity). அதாவது வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு படிப்படியாகச் சேர்வது. பொதுவாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு கூட வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு சேரும்.
தோலுக்கு அடியில் சேரும் கொழுப்பை விட, கல்லீரல் மற்றும் உள் உறுப்புகளைச் சுற்றி சேமிக்கப்படும் கொழுப்பு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர் சேத்தி சுட்டிக்காட்டுகிறார். இந்த மறைக்கப்பட்ட கொழுப்பு பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்துடன் (Poor Metabolic Health) இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் NAFLD-க்கான ஆரம்ப எச்சரிக்கைகளாகும்.
வயிற்றின் வலது பக்கத்தில், விலா எலும்புகளுக்குச் சற்று அடியில் ஏற்படும் அசௌகரியம் அல்லது லேசான வலி, சில சமயங்களில் கல்லீரல் வீங்கி அல்லது அழற்சியுடன் (Inflamed) இருப்பதைக் குறிக்கலாம். இது எப்போதும் கூர்மையான வலியாக இருக்காது. மாறாக, இது பெரும்பாலும் அழுத்தம், கனம் அல்லது நிறைவு போன்ற உணர்வாக இருக்கும். கல்லீரல் வலது பக்கத்தில் இருப்பதால், இதுபோன்ற உணர்வுகள், குறிப்பாக சோர்வு மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றுடன் தோன்றும்போது, அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது.
கொழுப்பு கல்லீரல் நோய், இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது. இன்சுலினுக்கு உடலின் செல்கள் திறமையாக பதிலளிப்பதை நிறுத்தும்போது இது நிகழ்கிறது. இது தினசரி வாழ்க்கையில் சாப்பிட்ட பிறகு அதிகப்படியான பசி, திடீர் ஆற்றல் இழப்புகள் அல்லது தோல் நிறம் கருமையடைதல் போன்ற நுட்பமான அறிகுறிகளாக வெளிப்படலாம். ரத்த சர்க்கரை அளவுகள் நீரிழிவு வரம்பிற்கு உயர்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இவை தோன்றும்.
கொழுப்புகள் மற்றும் நச்சுக்களைச் செயலாக்க கல்லீரல் போராடும்போது, அது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குமட்டல் உணர்வு, உணவுக்குப் பிறகு சீக்கிரம் வயிறு நிரம்பிய உணர்வு, அல்லது பொதுவாக உணவு மீது ஆர்வம் குறைவது ஆகியவை நுட்பமான அறிகுறிகளாகும். உணவுக் கொழுப்புகளைத் திறமையாகக் கையாளும் கல்லீரலின் திறன் குறைவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று டாக்டர் சேத்தி விளக்குகிறார். காலப்போக்கில், செரிமானத்தின் ஒழுங்குமுறை சமநிலையில் இருந்து விலகிச் செல்வதாக உணரலாம். இது உடனடியாக அபாய எச்சரிக்கையைத் தூண்டும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஏதோ சரியாக இல்லை என்பதை குறிக்கும்.