குளிர் சீசனுக்கு வரப்பிரசாதமாகும் 'கொய்யா பழம்' - நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!

குளிர் சீசனுக்கு வரப்பிரசாதமாகும் 'கொய்யா பழம்' - நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!

இயற்கை நமக்கு வழங்கும் கனிகளில் விலை மலிவானது, அதே சமயம் சத்துக்களில் முதன்மையானது கொய்யாப்பழம். குறிப்பாக, குளிர் காலங்களில் சந்தைகளில் அதிகம் காணப்படும் இந்த பழம், வெப்பமண்டல பகுதிகளில் விளையும் ஒரு அற்புத கனியாகும். தாவரவியல் ரீதியாக 'கிளைமெக்டோரிக்' (Climacteric) வகையை சேர்ந்த இது, மரத்திலிருந்து பறித்த பின்பும் பழுக்கும் தன்மையுடையது.

பொதுவாக, குளிர்கால தட்பவெப்பநிலை கொய்யாவின் சுவாச வீதத்தையும், நுண்ணுயிர் செயல்பாட்டையும் குறைப்பதால், இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் மிகுந்த தரத்துடனும், சுவையுடனும் காணப்படுகின்றன. வெறும் சுவைக்காக மட்டுமின்றி, நவீன அறிவியல் ஆய்வுகளின்படி சுவாச மண்டலம் முதல் செரிமான மண்டலம் வரை கொய்யா ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்: கொய்யாப்பழம் ஆரஞ்சு பழத்தை விட பல மடங்கு அதிக வைட்டமின் சி-யை கொண்டுள்ளது என்பது பலரும் அறியாத உண்மை. இதன் 100 கிராம் சதைப்பகுதியில் அடங்கியுள்ள சத்துக்கள் இதோ.

  • நீரேற்றம்: 80.8 கிராம் (உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது).
  • ஆற்றல்: 68 கிலோகலோரி (குறைவான கொழுப்பு கொண்டது).
  • நார்ச்சத்து: 5.4 கிராம் (செரிமானத்திற்குச் சிறந்தது).
  • வைட்டமின் சி: 228.3 மிகி (நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது).
  • பொட்டாசியம்: 417 மிகி (இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது).
  • மேலும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பி-வைட்டமின்கள் இதில் தாராளமாக உள்ளன.

நன்மைகள்: கொய்யாவின் பழம் மட்டுமின்றி, அதன் இலை, விதை ஆகியவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக 'ஃபைட்டோமெடிசின்' (Annals of Phytomedicine) ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சளி மற்றும் இருமல் நிவாரணி: கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, சுவாச குழாயில் உள்ள மென்மையான தசைகளில் வினைபுரிந்து, இருமலின் தீவிரத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள துவர்ப்பு தன்மை கிருமிகளை அழிக்க உதவுகிறது.

வயிற்றுப் புண் பாதுகாப்பு: எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கொய்யா இலை சாறு வயிற்று அமிலத்தன்மையைக் குறைத்து, இரைப்பையில் புண்கள் (Ulcers) ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்: கொய்யா இலை சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கார்போஹைட்ரேட் செரிமானத்தில் ஈடுபடும் என்சைம்களின் செயல்பாட்டைச் சீரமைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

நுண்ணுயிர் எதிர்ப்புச் செயல்பாடு: கொய்யாவின் விதை மற்றும் சாறுகள் 'ஈ-கோலை' (E.coli) போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வலிமை கொண்டவை.

தாதுக்களின் சமநிலை: இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நரம்பு மண்டலச் சமிக்ஞைகளையும், இரத்த நாளங்களின் செயல்பாட்டையும் சீராக வைக்க உதவுகின்றன.

கண் மற்றும் தோல் ஆரோக்கியம்: இதில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, கண் பார்வை மற்றும் தோலின் பொலிவை மேம்படுத்துகின்றன.