நியூசிலாந்தை 278 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 278 ரன்களில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஜான் காம்பெல் 44 ரன்களையும், ஷாய் ஹோப் 48 ரன்களையும், பிராண்டன் கிங் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மைக்கேல் ரே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட்டுகள் இழப்பின்றி 24 ரன்களை எடுத்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை, டாம் லேதம் 7 ரன்களுடனும், டெவான் கான்வே 16 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
இதில் லேதம் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன்னும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதிய கான்வே அரைசதம் கடந்தனர்.
பின்னர் 60 ரன்களுக்கு கான்வேவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களில் மிட்செல் ஹெய் 61 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்டர்சன் பிலீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின், 73 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் காம்பெல் 14 ரன்னிலும், ஆண்டர்சன் பிலிப் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதில் பிராண்டன் கிங் 15 ரன்களுடனும், கவெம் ஹாட்ஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளன. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மைக்கேல் ரே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.