சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் வில்லியம்சன்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி தற்சமயம் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் தங்களின் பதிலடியைக் கொடுத்தது.

இந்நிலையில் இத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட்டில் இருந்து மிகப்பெரும் செய்தி ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்தவகையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன், அந்த அணிக்காக 93 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 18 அரைசதங்களுடன் 2575 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக 75 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். மேலும் கேன் வில்லியம்சன் தலைமையில் மூன்று முறை டி20 உலகக் கோப்பையை சந்தித்துள்ள் நியூசிலாந்து அணியால், ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

மேற்கொண்டு 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.