நடிகர்களின் சம்பள உயர்வுக்கு ஓடிடி தளங்கள் தான் காரணம் - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
ஓடிடி தளங்களால் நடிகர்களுடைய சம்பளம் உயர்ந்துவிட்டது என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
புதிய வெப் சீரியஸான ’ஹார்ட்டிலே பேட்டரி’ அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, லைகா புரொடக்ஷன் தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “திரை உலகை பாதுகாக்க கூடியவர் செல்வமணி தான். அவரே சொல்லக்கூடிய லைகா ப்ரொடக்ஷன் தமிழ் குமரனுக்கு நாங்கள் நிச்சயம் ஒத்துழைப்பு தருகிறேன்” என்றார்.
இயக்குநர் செல்வமணி பேசுகையில், “புலன் விசாரணை திரைப்படத்தில் பணியாற்றும்போது என்னுடைய சம்பளம் மிகக் குறைவு. இருப்பினும் படம் வெற்றி பெற்ற பிறகு அடுத்த படத்திற்கு பெரிய சம்பளம் பெற்றேன். இதேபோல தான் இந்த வெப் தொடரில் பணியாற்றி இருக்கக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரை பெரியளவு விளம்பரப்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும்.
இப்போது ஓடிடி தளங்கள் திரைப்படத்தை வாங்குவதில்லை என முடிவு செய்துவிட்டன. இருப்பினும் அந்த குறிப்பிட்ட நடிகர்களோ தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் அப்படியே இருக்கின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி தளங்கள் இணைந்து பேசி நல்ல ஒரு முடிவினை எடுக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை மாறிவிட்டது. இந்த வருடம் வெளியான 300 படங்கள் மூலம் 15 தயாரிப்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 285 தயாரிப்பாளர்கள் தோல்வி அடைந்து மீண்டும் படம் எடுப்பதை விட்டுவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும். ஒரு படத்தினை எடுக்கின்ற தயாரிப்பாளர் அதில் லாபம் சம்பாதித்து அவரே அடுத்த படம் எடுக்கக்கூடிய நிலை வரவேண்டும்.
இந்தப் "ஹார்ட்டிலே பேட்டரி" வெப் தொடரில் காதலுக்கான நவீன மீட்டரை பயன்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி மீட்டர் ஒன்று இருந்திருந்தால் நிச்சயமாக நான் ரோஜாவை திருமணம் செய்திருக்கமாட்டேன் (நகைச்சுவையுடன்). காதல் மயக்கத்தில் ஆண், பெண் இருவருமே பல்வேறு விதமான பொய்களை சொல்வார்கள் என்பதுதான் எதார்த்தம்” என்று செல்வமணி பேசினார்.