காயத்திலிருந்து மீண்ட கம்மின்ஸ், ஹேசில்வுட்? வலுப்பெறும் ஆஸ்திரேலியா!

காயத்திலிருந்து மீண்ட கம்மின்ஸ், ஹேசில்வுட்? வலுப்பெறும் ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிப் பெற்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ள இருப்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பாட் காம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விளையாடுவார்களாக எந்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. முன்னதாக காயம் காரணமாக இருவரும் முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர்கள் இடம் பிடிப்பது சந்தேகம் தான் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் சிட்னி மைதானத்தில் வலை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இருவரும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், அவர்கள் நேரடியாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் தங்கள் இடங்களை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பாட் கம்மின்ஸ் அடுத்த டெஸ்டில் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகங்கள் நீடித்து வருகின்றன. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.