தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலை குறையவுள்ளது.
ஆடம்பர கார்களின் விலை
ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளான மெர்சிடிஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி 100%-க்கும் அதிகமாக இருக்கிறது. இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 15,000 யூரோக்களுக்கு (சுமார் ரூ.16 லட்சம்) அதிகமான விலை கொண்ட ஆடம்பர கார்களுக்கான வரி 40% ஆக குறையும். வரி மேலும் 10 சதவீதம் குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், வெளிநாட்டு கார்களின் ஆடம்பர கார்களின் விலை கணிசமாகக் குறையும்.
இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிறிய வகை கார்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்கள் இவற்றை பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றன. இதற்கு போட்டி இல்லாத வகையில், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒயின் விலை
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயினின் விலை குறையும். இந்த ஒயின்களுக்கு இந்தியாவில் தற்போது வரி 150% ஆக உள்ளது. புதிய ஒப்பந்த்தின்படி, இந்த வரி 20% ஆக குறைக்கப்படும். இதனால், ஐரோப்பிய ஒயின்களின் விலை இந்தியாவில் கணிசமாக குறையும். அதே நேரத்தில், 2.5 யூரோக்களுக்கு குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு வரிச் சலுகை இல்லை. உள்ளூர் தயாரிப்பாளர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துகளின் விலை குறையும்
மேம்படுத்தப்பட்ட சுகாதார தொழில்நுட்பங்களுக்குப் பெயர் பெற்றது ஐரோப்பா. இங்கு தயாரிக்கப்படும் சுகாதார கருவிகள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கான மருந்துகளின் விலை இந்தியாவில் குறையும். இதே போல், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஐரோப்பாவின் 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப அதன் சந்தை இந்திய மருத்து உற்பத்தியாளர்களுக்காக திறக்கப்படும்.
மின்னணு மற்றும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள்
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும். இதனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுப் பொருட்களின் விலை குறையும். இது நுகர்வோர்களுக்கு பயன் அளிக்கும்.
எஃகு மற்றும் ரசாயனப் பொருட்கள்
இரும்பு, எஃகு, ரசாயனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படும். இதனால், கட்டுமானம், தொழில் துறைகளில் மூலப் பொருட்களின் விலை குறையும். வீடு வாங்குபவர்கள் உள்ளிட்டோர் இதனால் பயனடைவார்கள். இதே போல், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல் மற்றும் நகைகள் ஐரோப்பிய சந்தைகளை எளிதாக எட்டும் வகையில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.