இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி
விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் ஜார்க்கண்ட் - கர்நாடகா அணிகள் இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 412 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷன் 39 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் விளாசினார். முன்னதாக அவர், தனது சதத்தை 33 பந்துகளில் விளாசி மிரட்டினார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார். இந்த வகை சாதனையில் பிஹார் அணியின் சகிபுல் கானி 32 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். இஷான் கிஷனுக்கு உறுதுணையாக விளையாடிய விராட் சிங் 88, குமார் குஷாக்ரா 63 ரன்கள் சேர்த்தனர்.