நாங்கள் ஏலத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை - பஞ்சாப் அணி உரிமையாளர்
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுடைய தக்கவைத்த மற்றும் விடுவிடுத்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிவித்திருந்தது. இதில் சில அணி டிரேடிங் முறையிலும் ஏலத்திற்கு முன்னதாகவே வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.
அதில் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு டிரெடிங் செய்துள்ளது. மேலும் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்தது தலைப்பு செய்தியாக அமைந்தது.
அதேசமயம் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 6 வீரர்களை விடுத்திருந்தது. அதன்படி கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, கைல் ஜேமிசன், குல்தீப் சென், பிரவீன் துபே ஆகியோரை விடுவித்ததன் காரணமாக, ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்க அந்த அணியிடம் கைவசம் ரூ.11.50 கோடி உள்ளது.
இதனால் இந்த மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி செல்லவே தேவையில்லை என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் அணியில் ஒற்றுமையின் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம். அதனால் நாங்கள் விடுவித்த வீரர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களை விடுவிக்கும் முடிவு எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் அது அணிக்கு தேவை என்பதால் மட்டுமே செய்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருப்பதன் காரணமாக எங்களுக்கு நல்ல சமநிலையான அணி உருவாகியுள்ளதுடன், சிறந்த தலைமையும் கிடைத்துள்ளது. அதன் காரணமாக நாங்கள் உண்மையில் ஏலத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் எங்கள் அணியை மேலும் வலுவாக்க முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
நெஸ் வாடியா கூறுவது போல், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் தற்சமயம் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்செல் ஓவன், ஷஷாங் சிங், நெஹல் வதேரே உள்ளிட்டோரும் பந்துவீச்சில் மார்கோ ஜான்சென், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் இருப்பது பெரும் பலமாக இருப்பதுடன், அவர்களுடன் உள்ளூர் திறமையாளர்களும் இருப்பது கூடுதல் சதகமாக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அர்ஷ்தீப் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, ஹர்பிரீத் ப்ரார், லோக்கி ஃபெர்குசன், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஓவன், முஷீர் கான், நேஹால் வதேரா, பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, பைலா அவினாஷ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், வைஷாக் விஜய்குமார், சேவியர் பார்ட்லெட், யாஷ் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்