டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஷுப்மன் கில்! அவரது இடத்தை நிரப்பும் புதிய கேப்டன் இவர்தான்

டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஷுப்மன் கில்! அவரது இடத்தை நிரப்பும் புதிய கேப்டன் இவர்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 22) கௌகாத்தியில் உள்ள பர்சபார கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற அழுத்தத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. காகிசோ ரபாடா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு மாற்றாக இங்கிடி லெவனில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியும் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி, காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக அவர் முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்தில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார்.

அதன்பின் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, முதல் பொட்டியில அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் ரிஷப் பந்த அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில், கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதுடன், கௌகாத்தி செல்லும் இந்திய அணியுடன் பயணித்தார். இதனால் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஷுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை ரிஷப் பந்த் வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. இருப்பினும் ஷுப்மன் கில்லிற்கு பதிலாக எந்த வீரரையும் பிசிசிஐ தேர்வு செய்யாததன் காரணமாக, சாய் சுதர்ஷன் அல்லது தேவ்தத் படிக்கல் லெவனில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணி (இரண்டாவது டெஸ்ட்): ரிஷப் பந்த் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், லுங்கி இங்கிடி*.