WPL 2026: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

WPL 2026: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 தொடரில், டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் 4ஆவது சீசன் ஜன.9 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஜன.10) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு அகாடமியில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 தொடரின் 3வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான அமெலியா கெர் 0 ரன்னிலும், ஜி கமலினி 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினர். இதனால், மும்பை அணி ஆரம்பத்திலேயே 51/2 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அதையடுத்து வந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 பந்துகளில் 74 ரன்களையும் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அந்த வகையில், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை எடுத்தார். இறுதியில் நிக்கோல் கேரி 12 பந்துகளில் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 195/4 ரன்களை குவித்தது. மேலும், டெல்லி தரப்பில் நந்தினி சர்மா 2 விக்கெட்டுகளையும், சினெல்லே ஹென்றி மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியது டெல்லி அணி. ஆனால், மும்பை அணியின் அபார பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓவர்கள் முடிவில் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், மூன்று வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களிலும், நான்கு பேர் இரட்டை இலக்க ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் சினெல்லே ஹென்றி மட்டும் ஓரளவிற்கு போராடி 56 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தார்.

மும்பை தரப்பில் அமெலியா கெர், நிக்கோலா கேரி இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால், மும்பை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் முதல் போட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை அணி தனது இரண்டாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேபோல, முதல் போட்டியில் களமிறங்கிய டெல்லி அணி தனது தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது.