நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 301 ரன்கள் இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். காயம் காரணமாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறவில்லை.
சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித், சிராஜ் மற்றும் ராணா உட்பட 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் கண்டது. பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் விதமாக ரோஹித், கோலி, கில், ஸ்ரேயாஸ் உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றனர்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கான்வே 56, ஹன்றி நிக்கோல் 62, டேரல் மிட்சல் 69 ரன்களை குவிக்க நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 302 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ராணா, பிரசித் உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 301 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.